கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் பலத்த காயம் பெற்ற பெண், ஸ்டெக்சரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அப்துல் சலாமின் மகள் நர்கீஸ். இவர், கடலூரில் காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றும் பாபாவின் மகன் காஜாரபீக் என்பவரை, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் போது, நர்கீஸ் பக்கம் இருந்து 30 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்திற்கு தேவையான பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குப்பின் கூடுதல் வரதட்சணைக்காக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக நர்கீஸ் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் வேலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், நர்கீஸ் ஸ்டெக்சரில் அமர்ந்தபடியே ஆம்புலன்ஸ் மூலம் வந்து மனு அளித்தார். தன்னை மாடியில் இருந்து தள்ளிய கணவர் துன்புறுத்தலை போலீசாருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நர்கீஸ் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “மனைவியை தாக்கிவிட்டு, தானாகவே கீழே விழுந்ததாக பொய் கூறுகிறார். நான் ரத்தத்தில் உறைந்தபோதும் அவர் எதுவும் செய்யவில்லை,” என்றார்.
இந்த மனுவை பெற மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, உரிய விசாரணைக்காக காவல்துறையுடன் இணைந்து சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்துள்ளார்.
தற்போது, இதைத் தொடர்ந்து, நர்கீஸை மாடியில் இருந்து தள்ளியதாக கூறப்படும் அவரது கணவர் காஜாரபீக் கைது செய்யப்பட்டுள்ளார். நர்கீஸ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடுப்பு, கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.