கடன் கொடுத்தவர் பொதுமக்களின் முன்னிலையில் கடையைப் பூட்டி அவமானப்படுத்தியதால், மனமுடைந்த முடிதிருத்தும் தொழிலாளி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாணாபுரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் சிறுவள்ளூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனி, அதே கிராமத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர் தனது குடும்பச் செலவுக்காக அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பழனிக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராமச்சந்திரன் அடிக்கடி கடைக்குச் சென்று பணத்தைக் கேட்டு பழனியை நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, பழனியின் சலூன் கடைக்குச் சென்ற ராமச்சந்திரன், அனைவரின் முன்னிலையிலும் பழனியைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அத்துடன் ஆத்திரத்தில் கடையை வலுக்கட்டாயமாக இழுத்து மூடிவிட்டுச் சென்றுள்ளார். தான் தொழில் செய்யும் இடத்தை மற்றவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியதால், பழனி மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த பழனி பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியறிந்த பழனியின் உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு முடி திருத்துவோர் நலச் சங்கத்தினர், பழனியின் தற்கொலைக்குக் காரணமான ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வடபொண்பரப்பி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ராமச்சந்திரனைத் தேடி வருகின்றனர்.தொழில் செய்யும் இடத்தை அவமானப்படுத்தியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















