“இபிஎஸின் தேர்தல் பிரசாரத்தில் மகத்தான அளவில் மக்கள் கூடுகின்றனர். அவரது பேச்சு பாஜகவை பாராட்டும் வகையில் உள்ளது,” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :
“அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் சந்திப்பு, சமூக தலைவர்களுடன் ஆலோசனை, தேர்தல் பிரசார கூட்டங்கள் என தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும்.
நாள்தோறும் மூன்று இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதில், இரண்டு இடங்களில் வீதி சந்திப்பு, மூன்றாவது இடத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் பாஜக தொண்டர்களும் இணைந்து பங்கேற்கின்றனர்.
இபிஎஸின் தேர்தல் பிரசாரத்தில் அசாதாரண அளவில் கூட்டம் கூடுகிறது. மேலும், அவரது பேச்சு பாஜக நோக்கத்துடன் ஒத்துப்போகும் விதமாக உள்ளது.
வரும் தேர்தல்களில், தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து பரப்புரைகள் நடத்தப்பட உள்ளன,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.