ஜனநாயகன் திரைப்படத்தை விட வழக்கில் அதிரடி ட்விஸ்ட்!

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரிய வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன், ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை நடைமுறைகள் இன்னமும் நிறைவுபெறவில்லை என்றும், மறுஆய்வுக்குழு அமைக்க 20 நாள்களாகும் என்றும், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகாமல் இருந்திருந்தால், இந்நேரம் படத்தின் மறுஆய்வு முடிந்திருக்கும் என்றும் வாதிட்டார்.

அதனை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதியே தட்கல் முறையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பத்தோம் என்றும், ஆட்சேபத்திற்குரிய காட்சி, வசனங்களை நீக்கி மீண்டும் டிசம்பர் 23-ம் தேதி விண்ணப்பித்தும். நீக்கிய காட்சிகளை குறிப்பிட்டே அவர்கள் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பப்போவதாக, தயாரிப்பு நிறுவனத்திற்கு தணிக்கை வாரியம் தகவல் தரவில்லை என்றும், விண்ணப்பித்த 2 நாள்களில் தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதிகளை அறிந்தே தனி நீதிபதி சரியான உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும் வாதிடப்பட்டது. படத்தை பார்த்த 5 நாள்களுக்கு பிறகு உறுப்பினர் ஒருவரே புகார்தாரராக மாறியிருப்பதாகவும், இது விதிமீறல் என்றும், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

Exit mobile version