ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து, மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர் திருவாரூர் வந்தடைந்தார்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற நபர் அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார் . மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை மீது கொண்ட பற்றின் காரணமாக, இயற்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதற்கு முன்பு காவல்துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில் அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் பொதுமக்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தார். அதன்படி தற்போது ஊட்டி பந்தலூர் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தனது பயணத்தின் ஆறாவது நாளாக இன்று திருவாரூர் மாவட்டம் வந்தடைந்தார். இயற்கை அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பயணம் மேற்கொண்டு வரும் அவரை வனம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்தினர். பயணத்தின் போது பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் இயற்கை பேணிக்காப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். புவி தற்போது மிக அதிக வெப்படைந்துள்ளதன் காரணமாக ஐந்து வருடங்களில் ஆறுகோடி மரங்களை நட வேண்டும். அதனால் நாம் அனைவரும் அவரவர் பிறந்த நாட்கள் மற்றும் அவரது குழந்தைகள் பிறந்த நாட்களில் மற்றும் மனதுக்கு பிடித்தவர்கள் பிறந்த நாட்களில் மரங்களை நட்டு பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்
