தமிழக காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்த சூர்ய பிரகாசம், இன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
விஜயின் த.வெ.க.வுக்கு மக்களிடையே ஆதரவுப் பேரலை பெருகி வருவதாகவும், செல்வபெருந்தகை கட்சியை திமுகவின் அடிமை கூடாரமாக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு காங்கிரஸில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக கூறியுள்ளார். கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.
எவ்வித கட்டுப்பாடுமற்று கட்சியில் தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதாகவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
