விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் கட்சி அலுவலகத்தில், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2005-ல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்பது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்று திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இத்திட்டத்தின் பெயரை மாற்றி 100 நாள் வேலையை பா.ஜனதா அரசு ரத்து செய்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதார உரிமைகள் மீது நடைபெறும் இந்த தாக்குதலை எதிர்த்தும், அவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் மக்கள் இயக்கம் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் நகராட்சி திடலில் நாளை (அதாவது இன்று) காலை 9 மணியளவில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மறுநாள் (12-ந் தேதி) முதல் 29-ந் தேதி வரை கிராம ஊராட்சி அளவில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டம் நடத்தி துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்படும். 30-ந் தேதி வார்டு வாரியாக அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். 31-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். எனவே இத்திட்டத்திற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்குவதுடன் பழைய முறைப்படியே இத்திட்டத்தை செயல்படுத்தி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில செயலாளர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக்அலி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஸ்ரீராம், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
பா.ஜனதா அரசை கண்டித்து கிராமப்புறங்களில் தொடர் போராட்டம் …….
