கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுகிறது – வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து பாண்டி சாராயம், மது பாட்டில்கள் சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 5414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக சாராயம், மதுபானங்கள் காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவது என்பது மாவட்ட காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இந் நிலையில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் அமோகமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வீடியோ பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது. சக்திவேல் என்பவர் குடும்பத்தாரோடு சேர்ந்து சாராயம் விற்பதாகவும், செம்பனார்கோவில் போலீசார் சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று வீடியோவுடன் வாட்ஸ் அப்பில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சாராயம் வாங்கியவர் சாராய வியாபாரி ஆகியோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்யும் நிகழ்வு பதிவாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை பகுதியில் சாராய வியாபாரியால் கொலை சம்பவமும் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version