பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வரும் 14-ம் தேதி முதல் தொடர் விடுமுறை வருவதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்புகிறார்கள். இதனால், ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் தனியார் ஆம்னி பேருந்து சேவையை நம்பியுள்ளனர்.
ஆனால், விடுமுறையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வழக்கமான கட்டணத்தைவிட 3 மடங்கு உயர்த்தியுள்ளனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 4 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை – கோவை இடையே ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சென்னை – மதுரைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும், சென்னை – நாகர்கோயிலுக்கு 4 ஆயிரத்து 200 ரூபாயும் வசூலிக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

















