பொங்கல் என்பது உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களும், தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கும் மக்களும் இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி ஆண்டுதோறும் கலந்துகொண்டு வருகிறார். இதையொட்டி, அவருடைய இல்லம் வாழை மரங்கள், தோரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொங்கல் பானைக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். தொடர்ந்து, பசு மாட்டிற்கு பச்சரிசி, வெல்லத்தை பிரதமர் வழங்கினார்.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், பிஜேபி தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மாநில பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மேலும், பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
