சபரிமலை பொன்னம்பலமேடு மலை உச்சியில், ஜோதி வடிவில் பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சி அளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சரண கோஷத்துடன் ஐயப்பனை மனமுருகி வழிபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனத்திற்காக, கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
மாலை 5-30 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் ஐயப்பனின் திருவாபரணங்கள் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து, 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னம்பலமேடு மலை உச்சியின் மீது, ஐயப்பன் ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது “சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோஷத்துடன் பக்தர¢கள் மனமுருகி ஐயப்பனை வழிபட்டனர்.

















