மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வெள்ளாலகரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பசுமைநேயக் கரங்கள் அறக்கட்டளை மற்றும் வெள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலக்கூட்டமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு விழிப்புணர்வு கோலமிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெங்கடேஸ்வரா நகர், சிவப்பிரியா நகர், ராமலிங்கம் நகர், கூட்டுறவு நகர், வடபாதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பதிவுசெய்து பங்கேற்றனர். இதில், பொதுமக்கள் தங்கள் வீடுகளின்முன்பு சாணி தெளித்து, மாக்கோலம் இட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், சுற்றுச்சூழல் குறித்த மஞ்சப்பை வரைந்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதனை 4 குழுக்களாக பிரிந்து மதிப்பீட்டுக்குழுவினர் பார்வையிட்டு, சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட கோலங்களை வரைந்தவர்களுக்கு குடியரசு தினத்தன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது. விழாவை, பசுமைநேயக் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் பாபு ஒருங்கிணைத்தார்.

















