மத்திய கிழக்கு நாடான ஈரானில், உச்சத் தலைவர் அயத்துல்லா கோமேனிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அமெரிக்க பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது. 48 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 10 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேரை தூக்கிலிட ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நாட்டில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
எனவே, ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், வணிக விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வழிகள் மூலம், நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டுக்கான இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்திய குடிமக்கள் தங்களின் பயண மற்றும் குடிவரவு ஆவணங்களை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உதவிகளுக்கு இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஈரானில் உள்ள இந்தியர்கள் தங்களின் இருப்பை பதிவுசெய்ய இணையதள முகவரியை அறிவித்துள்ள தூதரகம், இணையதள இடையூறுகள் காரணமாக பதிவுசெய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
