சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயாலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதால், 2 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக கூறினார்.எதை வைத்து அரசியல் செய்வது எனத் தெரியாத எதிர்க்கட்சிகள், அரசின் மீது வீண் அவதூறுகளைப் பரப்பி மக்களை குழப்ப நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எடுத்துச் சொல்லி, அவர்களை திமுகவின் வாக்காளர்களாக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி நமது சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் வெற்றி ஒன்றே இலாக்காக இருக்க வேண்டும். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். “தேர்தல் வருவதால் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என நினைக்காதீர்கள், தனிநபர்களை விட கட்சி தான் பெரிது என ஸ்டாலின் எச்சரித்தார்.
தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒரு சிலர் தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிடக்கூடாது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை தாம் பார்த்துக் கொள்வதாகவும், எந்த தொகுதியில் யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து, 100 சதவீத உழைப்பைக் கொடுத்து களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
