அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 17வயது சிறுவர்கள் – எச்சரித்து அனுப்பிய போலீஸ்

இளைஞர்கள் இருவர் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து கிடைக்கப்பட்ட புகாரின் பேரில் ஆவடி மாநகர காவல் ஆணையரக சைபர் கிரைம் போலீசார் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்ட இணைய முகவரியை கொண்டு விசாரணை நடத்தினர். அதில் சோழவரம் சுற்றுப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் என தெரிய வந்தது. இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 17வயது சிறுவர்கள் இருவரையும், கண்டறிந்து, பெற்றோர் முன்னிலையில் தீவிர விசாரணை நடத்தினர். காவல்துறை விசாரணையில் சிறுவர்களில் ஒருவர் அம்பத்தூர் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ படித்து வருவதும், ஒருவர் படிப்பை கைவிட்டு கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும் 17 வயது சிறுவர்கள் இருவர் மீது குற்றப்பின்னணி ஏதும் இல்லாத நிலையில், உள்நோக்கம் ஏதுமின்றி ரீல்ஸ் மோகத்தில் இருவரும் அரிவாளுடன் வீடியோ எடுத்து பதிவு செய்தது உறுதியானது. இதனையடுத்து சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட கூடாது என எச்சரித்து, சமூக வலைதளங்களை பொறுப்புடன் கையாள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய காவல்துறையினர் பெற்றோருடன் சிறுவர்களை அனுப்பி வைத்தனர்

Exit mobile version