வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்களின் ஆட்சேபனைகளை வரும் ஜனவரி 18-ம் தேதிவரை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனிடையே, சென்னை மாநகராட்சியில், இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.ஐ.ஆர்-க்கு பின்னர், தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார் .
இதனால் தமிழகத்தில் ஏற்கெனவே 6 கோடியே 41 லட்சமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 44 லட்சமாக குறைந்துள்ளது என்று கூறினார். வரைவு வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு பெற்றிருந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இன்றும் நாளையும், சென்னையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க, சிறப்பு முகாமில் விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் செய்வதற்கும், விண்ணப்பம் அளிக்கலாம்.















