கரூரில் அண்மையில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து த.வெ.க செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவைவும் அமைத்தது. இதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, 8 வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாக, த.வெ.க தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். மேலும், இதுகுறித்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு பதிலாக சென்னை பிரதான அமர்வு விசாரித்தது எப்படி என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தர உத்தரவிட்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
ஆனால், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை என்பதால். இதுவரை பதிலளிக்கவில்லை என. உயர்நீதிமன்றத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர், கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல், தனியாக சுயாதீனமாக விசாரணையை நடத்தும்.
எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணத்தை பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், மனுதாரர் தடைகோராத நிலையில், உச்சநீதிமன்றம் ஒருநபர் ஆணையத்திற்கு தடை விதித்துள்ளதால், அதை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு தமிழக அரசின் கோரிக்கை பற்றி விவாதிக்கலாம் எனக்கூறி, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
