இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கையில் கனமழை, புயல் மற்றும் நிலச்சரிவால் சிக்கித் தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த 24 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் ஆகியோருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இலங்கையை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த மாதம் 25ம் தேதி சென்னை முகப்பேர் மற்றும் கோவையை சேர்ந்த 29 பேர் ஒரு குழுவாகச் சென்றிருந்தனர். நுவரலியா செல்லும் வழியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக எங்கும் செல்ல முடியாமல் நடுவழியில் மாட்டிக்கொண்டனர்.

செய்வதறியாது தவித்த அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தங்களது உறவினர்கள் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அவரது தலையீட்டால், இலங்கையின் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளையும், சென்னை திரும்புவதற்கான விமானப் பயணத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால், ஆண்கள், பெண்கள் உள்பட 24 பேர் இன்று காலை பத்திரமாக வந்து சேர்ந்தனர். தங்களது கண் முன்னே நிலச்சரிவு ஏற்பட்டதை இப்போது நினைத்தாலும், நெஞ்சு பதைபதைப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Exit mobile version