திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில், இன்று சந்தனக்கூடு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், பதற்றமான சூழல் நிலவுவதால், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வருவாய் கோட்டாட்சியர் அனுமதியுடன், மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில், சந்தனக்கூடு திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதற்காக தர்காவைச் சேர்ந்த 4 இஸ்லாமியர்கள், நேற்று கொடி மராமத்து பணிகளை செய்யச் சென்றனர்.

அப்போது அவர்களை மட்டும் மலைமீது செல்ல காவல்துறை அனுமதி அளித்ததை கண்டித்து, கோட்டை தெரு மக்கள் மற்றும் பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் மலைப்பாதை, மலைமீது உள்ள காசி விஸ்வநாதர் கோவில், தர்கா, தீபத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துணை ஆணையர் இனிக்கோ திவியன், உதவி ஆணையர் சசிபிரியா மற்றும் 4 டி.எஸ்.பி.-க்கள் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version