இந்தியாவுக்கு தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே 2030-ஆம் ஆண்டு வரையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
உக்ரைன் போரை நிறுத்தும் வரை இந்தியா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் ரஷ்ய அதிபர், விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். காலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தியா-ரஷ்யா இடையிலான 23வது உச்சி மாநாட்டை முன்னிட்டு, பிரதமர் மோடியும், புதினும் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு உலக விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
அப்போது இரு நாடுகளிடையே 2030-ஆம் ஆண்டு வரை பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா, ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
மேலும், தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாக கூறினார். அது பகல்ஹாம் ஆனாலும், ரஷ்யா மீதான தாக்குதலானாலும் கூட்டாக முறியடிப்போம் என மோடி குறிப்பிட்டார்.















