திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்சினையில் அரசியல் செய்வதாக திமுகவும், பிஜேபியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் வெளிநடப்பும் செய்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக எம்பிக்கள் பிரச்சினை எழுப்பி அமளியல் ஈடுபட்டதால், நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பிஜேபி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்தப் பகுதி அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய பாலு, ஏற்கனவே தெளிவான தீர்ப்பு 1996ம் ஆண்டே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக உத்தரவிட வேண்டிய அவசியமில்லை. இதைவைத்து பிஜேபி அரசியல் செய்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி மட்டுமல்லாமல், இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட பிறகும், மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்து மலை உச்சியில் விளக்கு ஏற்றவிடாமல் திமுக அரசின் காவல்துறை தடுத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
















