சென்னை அண்ணாசாலையில் இயங்கும் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
அண்ணாசாலையில் 8 தளங்களை கொண்ட கட்டிடத்தில், பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 2-வது தளத்தில் இன்று காலை 9 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அந்த தளத்தில் கரும்புகை மூட்டம் வெளியேறியதால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அலறியடித்துக் கொண்டு, வெளியே வந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் 2-வது தளத்தில் இருந்து, 4வது தளம் வரை தீ பரவியது. எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, ஐஸ்கவுஸ் போன்ற இடங்களில் இருந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் மற்றும், சில முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் ஆனதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே, தீ விபத்து காரணமாக, தொலைத்தொடர்பு சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின், இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மின்கட்டணம் பெற முடியவில்லை. இதேபோல், சென்னை கட்டுப்பாட்டு அறை மற்றும் 108 ஆம்புலன்சு சேவையை தொடர்பு கொள்வதிலும் சிக்கல் எழுந்திருக்கிறது.















