கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசுப் பேருந்து அடுத்தடுத்து 2 கார்களில் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்து, கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில் வந்தபோது, அதன் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து, சாலையின் நடுவிலுள்ள தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்ற 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

















