திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் நான்கு மசூதிகளுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வஃக்பு வாரிய அலுவலகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த J.வாஜித் என்பவர் கூறுகையில், “மசூதிக்கு சொந்தமான சொத்துகளை விற்பனை செய்ய எந்தவித சட்ட அனுமதியும் இல்லாத நிலையில், மசூதியில் உள்ள சில மூத்தவல்லிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சொத்துகளை தனிநபர்களுக்கு விற்பனை செய்து விட்டனர். இதற்கான பத்திர விவரங்கள் மற்றும் பட்டியல்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறைகேடுகள் தொடர்பாக சிறுபான்மை நலத்துறை அதிகாரியான ஜோசப் . அருட்தந்தை அருண் என்பவரிடம் மனு அளித்த போது, ஐந்து நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும், ஆனால் அதற்கு பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதோடு மட்டுமல்லாமல், இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகம் மற்றும் காவல்துறை ஐஜி அலுவலகத்திலும் மனுக்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த விசாரணையோ, நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என்பது பெரும் மனவேதனையை ஏற்படுத்துவதாக J.வாஜித் தெரிவித்துள்ளார்.
மசூதி சொத்துகள் என்பது சமுதாயத்தின் பொதுச் சொத்தாகும். அவற்றை தனிநபர்கள் சொந்த லாபத்திற்காக விற்பனை செய்தது கடும் சட்ட மீறலாகும். இவ்விவகாரம் குறித்து உடனடியாக உயர்மட்ட விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தலையிட்டு, மசூதி சொத்துகளை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதே திருப்பத்தூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
