த.வெ.க தலைவர் விஜய், 2 மாதங்களுக்குப் பிறகு நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் இதைத் தெரிவித்துள்ளார். அதில், விஜய் கலந்துகொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, கியூ.ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள, 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. எனவே, கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
















