வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை முழுமையாக நடிகர் விஜய்க்கு வழங்குவது என்றும் அவரை முதலமைச்சராக்குவது என்றும் தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானமாக கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றப்பட்டது. கோவை கல்லூரி மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும், தமிழகம்-புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து முக்கிய அரசியல் தீர்மானமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும், தேர்தல் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை அவருக்கு முழுமையாக வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மூலம், அதிமுக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதை தவெக நிராகரித்திருப்பது உறுதியாகியுள்ளது.















