நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருவதால், தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், குரும்பூர் சுற்றுவட்டாரத்தில், இரவில் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களிலும், முக்கிய சாலைகளிலும், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்செந்தூர் சிவன் கோவிலில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்து வருவதால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தென்காசி மாவட்டத்திலும், பரவலாக கனமழை பெய்திருப்பதால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து, குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே, தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும், ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திருநெல்வேலி மாநகர பகுதியில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபங்களை மூழ்கடித்தபடி, தண்ணீர் செல்கிறது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்வதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

















