த.வெ.க தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படமான ஜனநாயகன், கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்குவதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அறிவுறுத்திய நிலையில், அந்தப் படத்தை வெளியிட ஏதுவாக சான்றிதழ் வழங்கக் கோரி பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை ஏற்று, உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, தணிக்கை சான்றிதழ் வழங்கியும், திரைப்படத்தை வெளியிடவும் அனுமதி அளித்தார். ஆனால், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தது.
இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்தநிலையில், உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையை எதிர்த்து, பட நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரத்தை விசாரிக்க விரும்பவில்லை என்றும், வரும் 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி, தணிக்கை சான்று தொடர்பாக முடிவெடுக்கும் என்றும் உத்தரவிட்டனர். எனவே, பட நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜனநாயகன் தணிக்கை சான்று தொடர்பாக, உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
