திமுகவை கொள்கை ரீதியாக வீழ்த்த முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில் வீழ்த்த நினைப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், கட்சியின் இளைஞரணி சார்பில், “திமுக-75 அறிவுத் திருவிழா” எனும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, அங்கு நடைபெறும் முற்போக்கு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில், “காலத்தின் நிறம்-கருப்பு சிவப்பு” என்ற புத்தகத்தை அவர் வெளியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, செல்வபெருந்தகை, சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் புத்தகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தாம் நினைத்தை விட மிக சிறப்பாக அறிவுத்திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டினார். திமுக உருவான வரலாறை நினைவு கூர்ந்த முதலமைச்சர், இதுபற்றி தெரியாதவர்கள் நம்மை மிரட்டி பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள் திமுவை போல வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்பதாக விமர்சித்தார்.
