மக்களுக்கு திமுக-வினர் ஓடி ஓடி உதவிட வேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்

மழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திமுக-வினர், மழைக்காலத்தை எதிர்கொள்ளவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையிலும் களத்தில் முழுமூச்சுடன் துணையாக நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழு அளவில் தயாராக உள்ளது என்றாலும், ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக் காலத்தை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக-வும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் – தன்னார்வலர்களுடன் இணைந்து திமுக-வினர், மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம். குடிநீர், பால் ஆகிய இரண்டும் தடையின்றிக் கிடைப்பததை கட்சியினர் உறுதி செய்ய வேண்டும், ஆங்காங்கே நடைபெறும் மீட்பு பணிகளிலும் உதவிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version