தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், ஏற்கெனவே ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான பணிகள் இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மேலும் ஒரு வாரமும், உத்தரப்பிரதேசத்திற்கு மேலும் 15 நாட்களும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

















