தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள், நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 51 கோடி வாக்காளர்களை உள்ளடக்கி, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 70 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் எஸ்.ஐ.ஆர். படிவங்களை கொடுத்துள்ளனர்.
இந்த படிவத்தை பெரும்பாலானவர்கள், பூர்த்தி செய்து ஒப்படைத்து விட்டனர். இதுவரை பூர்த்தி செய்து ஒப்படைக்காதவர்கள், டிசம்பர் 4-ந்தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வாக்காளர்கள் டிசம்பர் 11-ந்தேதிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு, டிசம்பர் 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த பட்டியலில் பெயர் இடம்பெறாவிட்டாலோ, அல்லது திருத்தம் செய்வதற்கு, டிசம்பர் 16 முதல், பிப்ரவரி 7-ந்தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல், 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.















