எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன், 1977-ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கோபிச்செட்டி பாளையம் தொகுதிகளில் போட்டியிட்டு, 1996 தேர்தல் தவிர, மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அவர், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
செங்கோட்டையன் நடிகர் விஜயின் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை உறுதி செய்யும் வகையில் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டுக்குச் சென்ற செங்கோட்டையன் அவரை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது த.வெ.க. நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்நிலையில் செங்கோட்டையன் இன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு, நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு இணையான பதவி வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.















