சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதி வருவதால், கேரள அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பக்தர்கள் ஒழுங்குபடுத்த அரக்கோணத்தில் இருந்து, பேரிடர் மீட்பு குழு சபரிமலைக்கு விரைந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், கோவிலுக்கு வருகை தந்து, வழிபாடு நடத்தி செல்கின்றனர். இதனால், பம்பை முதல் சன்னிதானம் வரை கூட்டம் அலைமோதுகிறது. கேரள மாநில போலீஸார், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
இந்நிலையில், கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 60 பேர், மீட்பு உபகரணங்களுடன் சபரிமலைக்கு விரைந்துள்ளனர். இவர்கள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் பணியில் இருப்பார்கள். மழைவெள்ளம், நிலச்சரிவு, கூட்ட நெரிசல் போன்ற சமயங்களில் இவர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படும் பட்சத்தில், பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பார்கள்.

















