திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் இருவருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. தவிர, 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது வைப்புத்தொகை எட்டரை கோடி ரூபாயில் முறைகேடு நடைபெற்றதா என்பது குறித்து கண்டறிவது, வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தேனாண்டாள் முரளி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
