தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதை திறம்பட மேற்கொள்ள மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசின் இந்த முடிவினால், விரிவான நம்பகமான தரவுகளை பெற்று, சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்திடவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திட இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை மத்திய அரசின் பட்டியலில் இருந்தாலும் அதன் முடிவுகள், கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாக பாதிக்கும். எனவே இப்பணி தொடர்பான வினா படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன்பாக, அனைத்து மாநிலங்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிப்பது அவசியம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனை பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை செய்ய வேண்டும்,
பிரதமரின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலற்று சிறப்புமிக்க நடவடிக்கை சமத்துவம் மற்றும் அனைரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சி கொள்கைகளை நிலை நிறுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் பிதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

















