வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பீஹாரில் எத்தனை ரோஹிங்கியாக்கள் அடையாளம் காணப்பட்டு, பெயர்கள் நீக்கப்பட்டன என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன.
இந்தநிலையில், மேற்குவங்கத்தில் இந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருணாமூல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்றுப் பேசிய மம்தா பானர்ஜி, மத்திய பிஜேபி அரசை கடுமையாக விமர்சித்தார். பீஹாரில் எத்தனை ரோஹிங்கியாக்கள் அடையாளம் காணப்பட்டனர்? அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி விட்டதா என்று மம்தா கேள்வி எழுப்பினார்.
மம்தா பானர்ஜியின் பேரணிக்கு, பிஜேபி-யைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேற்குவங்கத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு இல்லை, வாக்காளர் பட்டியலில் ரோஹிங்கியாக்களை சேர்க்க திரிணமுல் காங்கிரஸ் அரசு ஊக்குவிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
















