திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த மதுரை உயர் நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியான ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயிலின் முன் உள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து உத்தரவிட்டார். ஆனால், இதை கோவில் நிர்வாகம் செயல்படுத்தவில்லை என்றுகூறி இந்து மத அமைப்பை சேர்ந்தவர் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

அதை நேற்று மாலை 6 மணிக்கு மேல் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், உயர்நீதிமன்றப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஎஸ்ஐஎப் படையினரின் பாதுகாப்புடன், மனுதாரரை விளக்கு ஏற்றச் செல்ல உத்தரவிட்டார். ஆனால், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், சிஎஸ்ஐஎப் படையினர் மலைமீது ஏறுவதற்கு, தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், அங்கு தள்ளு முள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறையினரும், இந்து அமைப்பினர் சிலரும் காயமடைந்தனர். இது தொடர்பாக, பிஜேபி மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், சிஎஸ்ஐஎப் படையினரை பாதுகாப்புக்கு அனுப்பியதன் மூலம் தனி நீதிபதி தனது அதிகாரவரம்மை மீறிவிட்டார் என்பதால், அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர் மனுதாரர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாலையில் அளித்த தீர்ப்பில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்ததோடு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

மாநில அரசு கடமையைச் செய்ய தவறியதாலேயே, சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் தீபத் தூணில் தீபமேற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், மாநில அரசு எதோ ஒரு நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version