மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கதிர் தொடர்ந்த வழக்கில், விதிகளின்படி 20 லட்சம் மக்கள் தொகையுள்ள நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க முடியும் என்ற கூறப்படுகிறது. தமிழக அரசு 15 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே காட்டும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அனுப்பியுள்ளது. ஆனால், மதுரையில் தற்போது சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு முறையாக சரி செய்து அனுப்பவும், மத்திய அரசு அதனை பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிடக் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்றும், விளக்கம் கோரியே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், வழக்கு தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















