பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பிஜேபி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை படுதோல்வி அடைந்திருப்பது, அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன், ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பீகாரில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்திருப்பதாக, அதற்கான ஆதாரங்களை திரட்டி விரைவில் மக்களிடம் வெளிப்படுத்துவோம் என்றார்.
இதனிடையே, பீகார் தேர்தல் தோல்வியை அடுத்து, அரசியலில் இருந்து விலகுவதாக, லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சாரியா அறிவித்துள்ளார்.
