ஜம்மு-காஷ்மீரில் காவல்நிலையம் அருகே, அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பொருள் வெடித்ததில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவை வெடித்தது. இந்த சம்பவத்தில் தடயவியல் குழு மற்றும் போலீசார் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற சந்தேகங்களுக்கு இடமில்லை என்றார்.
இந்த துயரமான நேரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுடன் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உடன் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
