திமுக துணை பொதுச் செயலாளர்களாக அமைச்சர் சாமிநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரை நியமனம் செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
தற்போது, அமைச்சர் சாமிநாதன் மற்றும் பொன்முடி ஆகியோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதால், துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சாமிநாதனுக்கு துணை பொதுச்செயளார் பதவி வழங்கப்பட்டுள்ளதால், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக, தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஈஸ்வரசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, திமுகவின் நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு வேலூர் தெற்கு, வடக்கு என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
