திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், அய்யப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
திருத்தணி அடுத்துள்ள முருகம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த 36 பேர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு, தனியார் பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று காலை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற இடத்தில், சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு, அருகே உள்ள கடையில் டீ குடிக்க, சாலையை கடந்து சென்றுள்ளனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில், 4 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சூர்யா, கங்காதரன் என 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி
