விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், சேத்தூர் ஜமீனுக்கு சொந்தமான “நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி” கோவில் உள்ளது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில், இரவு காவலாளியாக பணியாற்றிய பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகிய 2 பேரும், நேற்று கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இரவு நேரத்தில், கோவில் நகை மற்றும் உண்டியல் பணத்தை திருட வந்தவர்கள், காவலாளிகள் 2 பேரையும் கொலை செய்துவிட்டு, தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீஸார், நாகராஜ் என்பவரை கைது செய்தனர். அவர் கோவிலில் திருடிய பொருட்களை, கோவிலுக்கு அருகே மறைத்து வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
அதனை பறிமுதல் செய்ய சென்றபோது, உதவி ஆய்வாளர் கோட்டியப்பசாமியை தாக்கிவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. இதையடுத்து, உடன் சென்ற போலீஸார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயம் ஏற்பட்ட நாகராஜூவும், தாக்குதலில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் கோட்டியப்பசாமியும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
