தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வேதனை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி மோசுமி பத்தாச்சார்யா குறித்து, ஒரு வழக்கின் மனுதாரரும், இரண்டு வழக்கறிஞர்களும் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணையை நடத்தினர்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் நடைமுறை கண்டிப்புடன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்த மன்னிப்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்டாதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. ஏனென்றால் சட்டத்தின் மகத்துவம் என்பது தண்டனையில் கிடையாது, மாறாக செய்த தவறுக்கான மன்னிப்பை கேட்கும்பொழுது அந்த மன்னிப்பை ஏற்பதில்தான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். எனினும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் எதிர்காலத்தில் இதே தவறை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.


















