மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் எள்ளவும் உண்மை இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில் இன்று வரை, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவுப்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வள குழுமத்திடம் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது.
இந்த சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து விட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தக்கது என்றும் இந்த தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடகா அரசின் எந்த ஒரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எரியும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

















