வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல், சென்னைக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவை நெருங்கியுள்ளது. இது இன்று மாலை தமிழக கடற்கரையை ஒட்டி, 30 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காலை 8-30 மணி நிலவரப்படி, டிட்வா புயல் காரைக்காலுக்கு கிழக்கே 100 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டரிலும், சென்னைக்கு தெற்கு தென் கிழக்கே, 180 கிலோ மீட்டரிலும் நிலை கொண்டிருந்தது.
டிட்வா புயல் காரணமாக சென்னை காசிமேடு, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. வானம் மேக மூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
டிட்வா புயல், தமிழக கடற்கரையை 30 கிலோ மீட்டர் வரை, புயல் நெருங்கினாலும், கரையை கடக்காமல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என, வானிலை மையத்தின் இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.















