சென்னையில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், அமைச்சர் அன்பில் மகேஷ், கே.என்.நேருவின் திருச்சி வீட்டில், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, சென்னையில் இருந்து, திருச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி தில்லை நகர் மற்றும் லால்குடியில் உள்ள அமைச்சர் நேருவின் வீட்டில், போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். ஆனால், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இதேபோல், திருச்சி அண்ணாநகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டிலும், திருவெறும்பூரில் உள்ள மற்றொரு வீட்டிலும், போலீஸார் சோதனை நடத்தினார்கள். இதற்கிடையே, திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அங்கும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்பதால், மிரட்டல் பொய்யான தகவல் என தெரியவந்திருக்கிறது.
