கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான காரணங்களும், நீதிபதிகள் எடுத்துரைத்த முக்கிய அம்சங்களும் தற்போது வெளிவந்துள்ளன.
கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தமிழக அரசு உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.
ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இன்று நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள், “கரூர் சம்பவம் நாடு முழுவதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் தீவிரத்தை உணராமல் சில காவல் அதிகாரிகள் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துகள், நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
கரூர் டவுன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) சிபிஐக்கு ஒப்படைக்க வேண்டும்.
தாமதமின்றி, உயர் அதிகாரி தலைமையிலான சிபிஐ விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
கரூர் எஸ்பி, டவுன் காவல் நிலைய அதிகாரிகள், உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் ஆகியவை சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சிபிஐக்கு ஒப்படைக்க வேண்டும்.
சிபிஐ விசாரணை தொடங்கியதால், சிறப்பு புலனாய்வுக் குழுவும் ஒருநபர் ஆணையமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ராஸ்டோகி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லாத, ஆனால் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐ.ஜி. அந்தஸ்திலான ஐ.பி.எஸ் அதிகாரிகள் சேர்க்கப்படுவர்.
இது இடைக்கால உத்தரவு என்றும், எதிர் தரப்பின் பதில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின் தேவையெனில் மேலதிக உத்தரவு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த உத்தரவு மூலம், கரூர் துயரச் சம்பவத்தின் விசாரணை ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.