திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு மேல், திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து, கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை வதம் செய்கிறார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
			















